20 நாள் ஆன 100 நாள் வேலைத் திட்டம்!!!

0
552

ஆறு மாதங்களாகத் தமிழகத்தில் முடங்கிக் கிடக்கும் நூறு நாள் வேலைத்
திட்டத்தை மீண்டும் செயல்படுத்துமாறும், கோடைக் காலத்தில் குடிதண்ணீர் கிடைப்பதற்குரிய வழிவகைகளைச் செய்யுமாறும் தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் ஏப்ரல் 26,27 தேதிகளில் சென்னையில் மத்தியக் குழு உறுப்பினர் உ. வாசுகி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அரசியல் விவகாரங்களை விட மக்கள் பிரச்சினைகளுக்கே இந்த செயற்குழு முக்கியத்துவம் கொடுத்து விவாதித்தது. அதன் அடிப்படையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முதல் தீர்மானமாக, ”தமிழகத்தில் கோடைக் காலத் துவக்கத்திலேயே குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. சென்னை, மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி, திருச்சி, கரூர், நாமக்கல், வேலூர், புதுக்கோட்டை, தர்மபுரி, சேலம், திருவாரூர் உள்ளிட்ட பெரும்பகுதியான மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறையால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அன்றடாம் குடிநீருக்காக அலைவதே மக்களுக்குப் பெரும் வேலையாக உள்ளது. நகரங்கள் மட்டுமின்றி கிராமங்களிலும் குடிநீரை விலைக்கு வாங்கும் மோசமான நிலைமை ஏற்பட்டுள்ளது. கோடைக் காலம் முடிவதற்குள் குடிநீர் பிரச்சினை பூதாகரமான பிரச்சினையாக மாறும் அபாயம் உள்ளது.

எனவே தமிழக அரசு தற்போது ஏற்பட்டுள்ள குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்க, போர்க்கால அடிப்படையில் தலையீடு செய்து குடிநீர்த் தட்டுப்பாடு உள்ள அனைத்துப் பகுதிகளிலும் குடிநீர் வழங்குவதற்கான ஏற்பாட்டினை உறுதி செய்திட வேண்டும்’’ என்று வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

100 நாள் வேலைதிட்டம் சிதைக்கப்பட்டதைக் கண்டிக்கிறது இன்னொரு தீர்மானம்.

”சமீபத்தில் தமிழ்நாட்டில் நூறு நாள் வேலைத்திட்டப் பணிகள் 40 நாட்களாகச் சுருக்கப்பட்டது. இப்பொழுது 20 நாட்களாக அது சுருக்கப்பட்டுள்ளது. மேலும் கிராமத்தில் ஜாப் கார்டு வைத்திருக்கும் அனைத்துத் தொழிலாளிகளுக்கும் வேலைதருவது என்பதற்குப் பதிலாக சுழற்சி முறையிலே வாரத்திற்கு 10 பேர், 20 பேருக்கு வேலைதருவது என புதிய உத்தரவின் மூலமாக அனைத்து தொழிலாளிகளுக்கு வேலை கிடைப்பதைத் தடுத்துவருகிறது.

மொத்த ஒதுக்கீட்டுத் தொகையில் 90 சதம் உழைப்புக்கான கூலிக்கும், 10 சதம் நிர்வாகச் செலவுக்கும் என்று சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது. ஆனால் மத்திய அரசு நிர்வாக உத்தரவின் மூலமாக உழைப்புக்கு 51 சதம் நிர்வாகத்திற்கு, கட்டுமானச் செலவுக்கு 49 சதவீதமாக எனச் சட்டத்தின் நோக்கத்தையே சிதைத்துவிட்டது.

இப்பொழுது தமிழ்நாட்டில் கடந்த ஆறு மாதங்களாகத் தமிழ்நாட்டில் நூறு நாள் வேலைத் திட்டங்கள் முடக்கி வைக்கப்பட்டுள்ளன. மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு கொடுத்து வேலை கேட்டால் மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை, எனவே இப்பொழுது வேலை இல்லை என்று திருப்பி அனுப்பும் நிலை தமிழ்நாடு முழுவதும் ஏற்பட்டுள்ளது. மகாத்மா காந்தி வேலை உறுதிச் சட்டம் எந்த நோக்கத்திற்குக் கொண்டுவரப்பட்டதோ அதைத் தமிழக அரசும், மத்திய அரசும் அமல்படுத்த வேண்டும்’’ என்று வலியுறுத்தியுள்ளது மார்க்சிஸ்ட் கட்சி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here