ஆன்-லைன் மூலம் என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைக்கு 3-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்!!!

0
251
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறியதாவது:-
இந்த ஆண்டு முதல் ஆன்-லைன் மூலம் என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கையை நடத்த திட்டமிட்டு அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆன்-லைன் மூலம் மாணவர்கள் விண்ணப்பிப்பது தொடர்பான அறிவிப்பு வருகிற 29-ந்தேதி வெளியிடப்படுகிறது.
ஆன்-லைன் மூலம் விண்ணப்பத்தை மாணவர்கள் பதிவு செய்வது அடுத்த மாதம் (மே) 3-ந்தேதி தொடங்குகிறது. 30-ந்தேதி பதிவு செய்ய கடைசி நாள் ஆகும். ஜூன் மாதம் முதல் வாரம் சான்றிதழ் சரிபார்ப்பு தொடங்குகிறது. ஜூலை மாதம் முதல் வாரம் மாணவர்கள் தாங்கள் விரும்பும் கல்லூரி, பாடப்பிரிவை தேர்வு செய்வது தொடங்குகிறது. பிளஸ்-2 தேர்வு முடிவு 16-ந்தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முடிவு வெளியாவது ஒருவாரம் வரை தள்ளிப்போனால் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட தேதியில் அனைத்தும் நடைபெறும். 10 நாட்களுக்கு மேல் தள்ளிபோனால் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட தேதியில் மாற்றம் செய்யப்படும். அதேபோன்று மருத்துவ கலந்தாய்வை பொறுத்தும் தேதியில் மாற்றம் செய்ய நேரிடலாம்.
மாணவர்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் ஆன்- லைன் மூலம் தங்களது விண்ணப்பத்தை பதிவு செய்யலாம். ஆன்-லைன் வசதியை பெற முடியாத நிலையில் இருக்கும் கிராமப்புற மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டும், ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறை பற்றி தனக்கு தெரியாது என்று கருதும் மாணவர்களுக்காகவும் தமிழகத்தில் 42 உதவி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆன்-லைன் மூலம் விண்ணப்பிப்பதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் இந்த உதவி மையத்தை மாணவர்கள் அணுகலாம்.
அனைத்து மாணவர்களின் அசல் சான்றிதழ்களும் உதவி மையத்தில் தான் சரிபார்க்கப்படும். சம்பந்தப்பட்ட மாணவர்கள் தான் அசல் சான்றிதழ்களை கொண்டு செல்ல வேண்டும் என்று இல்லை. அவரது பெற்றோரோ அல்லது உறவினரோ அசல் சான்றிதழை சமர்ப்பிக்கலாம். விண்ணப்ப பதிவுக்கான கட்டணம் ரூ.500 ஆகும். ஆதிதிராவிடர், பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு பதிவுக்கட்டணம் ரூ.250 ஆகும். ஆன்-லைன் மூலம் விண்ணப்பிப்பவர்கள் ஆன்-லைன் மூலம் பதிவுக்கட்டணத்துக்கான பணத்தை செலுத்த வேண்டும்.
உதவி மையத்தின் மூலம் விண்ணப்பிப்பவர்கள் அங்கு பதிவுக்கட்டணத்துக்கான பணத்தை செலுத்த வேண்டும். ஆன்-லைன் மற்றும் உதவி மையத்தில் பதிவு செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் எடுத்து அசல் கல்வி சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், சாதி சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்களுடன் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட உதவி மையத்தை சான்றிதழ் சரிபார்ப்பின் போது அணுக வேண்டும். அங்கு விண்ணப்பத்தில் உள்ள தகவல்கள் அசல் சான்றிதழ்களுடன் ஒப்பிட்டு பார்க்கப்படும்.
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தை பதிவு செய்யும்போதே தங்கள் விருப்பப்படி எந்த உதவி மையத்தை வேண்டுமானாலும் தேர்வு செய்து கொள்ளலாம். உதவி மையங்களில் விண்ணப்பதாரர்களுக்கு என்ஜினீயரிங் கல்லூரிகள் பற்றிய தகவல் கையேடு வழங்கப்படும். ஆன்-லைன் முறையிலான கலந்தாய்வில் கலந்துகொள்வதற்கான செயல் முறைகள் பற்றி மாணவர்களுக்கு வீடியோ காட்சி மூலம் உதவி மையத்தில் விரிவாக எடுத்துக்கூறப்படும்.
இதன்பின்பு, தரவரிசை பட்டியல் ஆன்-லைனில் வெளியிடப்படும். இதில் ஏதேனும் குறை இருந்தால் அதை சரிசெய்ய ஒரு வாரம் கால அவகாசம் அளிக்கப்படும். விண்ணப்பதாரர்கள் சென்னையில் செயல்படும் தமிழ்நாடு என்ஜினீயரிங் மாணவர்கள் சேர்க்கை செயலாளரை அணுகி குறைகளை சரி செய்து கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் தகுதி மதிப்பெண் அடிப்படையில் பல குழுக்களாக பிரிக்கப்படுவார்கள். அவ்வாறு பிரிக்கப்பட்ட குழுக்கள் கலந்தாய்வு சுற்றுகளில் மதிப்பெண்களின்படி அனுமதிக்கப்படுவார்கள்.
விண்ணப்பதாரர்கள் கலந்தாய்வுக்கான முன்வைப்பு தொகையை ஆன்-லைன் மூலம் செலுத்திய பின்பு தங்களுக்கு விருப்பமான கல்லூரி மற்றும் பாடப்பிரிவை பதிவு செய்யலாம். எத்தனை கல்லூரிகளை வேண்டுமானாலும் வரிசையாக பதிவு செய்யலாம். இதற்காக 3 நாட்கள் ஒதுக்கப்படும்.
இதன்பின்பு, தற்காலிக இட ஒதுக்கீடு அளிக்கப்படும். விண்ணப்பதாரர்கள் இதை தங்களது லாக்-இன் மூலமாக மறுநாள் பார்த்துக்கொள்ளலாம். இதை 2 நாட்களுக்குள் விண்ணப்பதாரர்கள் உறுதி செய்ய வேண்டும்.
கலந்தாய்வு குறித்த தகவல் அவ்வப்போது விண்ணப்பதாரர்கள் பதிவு செய்துள்ள செல்போன் எண்ணிற்கு குறுஞ்செய்தி(எஸ்.எம்.எஸ்.) மூலமாக அனுப்பப்படும். அதேபோன்று இ-மெயிலுக்கும் தகவல் அனுப்பப்படும். மேலும், தகவல் அறிய விரும்புபவர்கள் https://tnea.ac.in மற்றும் https://www.annauniv.edu என்ற இணையதள முகவரியை பார்க்கலாம். அதேபோன்று 044-22359901-ல் தொடங்கி 22359920 வரையிலான தொலைபேசியில் தொடர்பு கொண்டும் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்களுக்கான கலந்தாய்வு, தொழிற்துறை படிப்புக்கான கலந்தாய்வு, ஆதிதிராவிடர் அருந்ததியருக்கான இட ஒதுக்கீடு நிரப்பப்படாத பட்சத்தில் அந்த இடத்தை நிரப்ப ஆதிதிராவிட மாணவர்களுக்காக நடத்தப்படும் கலந்தாய்வு, துணை கலந்தாய்வு ஆகியவை நேர்முக கலந்தாய்வாக சென்னையில் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது தமிழக உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் சுனில்பாலிவால், தமிழ்நாடு என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை செயலாளர் ரைமன்ட் உத்தரியராஜ், அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் கணேசன் ஆகியோர் உடன் இருந்தனர். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here