புதிய பாடத்திட்டம்: ஆசிரியர்களுக்கு ஜூனில் பயிற்சி!!!

0
318
தமிழகத்தில் வரும் கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய பாடத் திட்டம் குறித்து பள்ளி ஆசிரியர்களுக்கு ஜூன் மாதம் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

தமிழகத்தில் வரும் கல்வியாண்டு முதல் 1, 6, 9, 11 ஆகிய வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் வகுப்புகள் நடைபெறவுள்ளன. இதற்காக தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் நிறுவனம் சார்பில் புத்தகங்கள் அச்சடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தப் பணி முடிவடைந்ததும் தொடர்புடைய பள்ளிகளுக்கு புத்தகங்கள் நேரடியாக அனுப்பி வைக்கப்படும். இந்த நிலையில் 1, 6, 9 மற்றும் 11 -ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கு புதிய பாடத்திட்டம் தொடர்பாக பத்து நாள்கள் வரை பயிற்சி அளிக்கப்படவுள்ளது. 
இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறும்போது , ‘புதிய பாடத் திட்டத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதற்கேற்ப மாணவர்களுக்கு கற்பித்தல் முறையில் சிறந்த மாற்றங்களையும் ஏற்படுத்தியுள்ளோம். இதைத் தொடர்ந்து தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு கற்பித்தல் முறைகள் குறித்து வரும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் பயிற்சி அளிக்கத் திட்டமிட்டுள்ளோம். அப்போது முப்பரிமாண படங்கள், செல்லிடப்பேசியில் ஸ்கேன் செய்து கூடுதல் தகவல்களைப் பெறும் ‘க்யு.ஆர்.’ குறியீட்டு முறை போன்ற அம்சங்கள் குறித்து மாணவர்களுக்கு தெரியப்படுத்துவது எனப் பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கவுள்ளோம். 
இந்தப் பயிற்சி முகாம் 10 நாள்கள் நடைபெறும். பயிற்சியைப் பெறவுள்ள ஆசிரியர்கள் குறித்த விவரங்கள் மாவட்டக் கல்வி அலுவலகங்கள் மூலமாக சேகரிக்கப்பட்டு வருகின்றன. இதைத்தொடர்ந்து தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு அந்தந்த மாவட்டங்களிலேயே பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர் அவர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here