மாவட்ட கருவூலத்திற்கு கூடுதல் ஊழியர்கள் நியமிக்க கிடப்பில் போடப்பட்ட முதன்மை செயலர் பரிந்துரை!!!

0
240

மதுரை, பிப். 5–மதுரை மாவட்ட கருவூலத்தில் ஊழியர் பற்றாக்குறையால் ஒருவர் 4 ஆயிரம் 
ஓய்வூதியர்களின் பணிகளை கவனிக்கும் அவலம் நிலவுகிறது. கூடுதல் ஊழியர்களை நியமிக்க ஏதுவாக, மாவட்ட கருவூலத்தை ஓய்வூதிய அலுவலகமாக மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.மாவட்ட கருவூலத்தில் 1980 க்கு முன்பு வரை தேவையான ஊழியர்கள் இருந்தனர். இங்கிருந்த ஊழியர்கள் 1980 ஜன., 24 துவங்கப்பட்ட திண்டுக்கல் கருவூலம், 1987 செப்., 1 துவக்கப்பட்ட மதுரை சம்பளக்கணக்கு அலுவலகம், 2000 அக்., 1 துவங்கப்பட்ட தேனி கருவூலத்திற்கு பிரித்து அனுப்பப்பட்டனர். புதிய அலுவலகங்கள் துவங்கிய போதெல்லாம் இங்கிருந்து ஊழியர்கள் மாற்றப்பட்டதால் ஊழியர்கள் எண்ணிக்கை குறைந்து விட்டது.மாவட்டத்தில் ஓய்வூதியர்களின் எண்ணிக்கை மட்டும் 44 ஆயிரம் உள்ளது. மாதந்தோறும் 100 பேர் ஓய்வு பெற்று ஓய்வூதியம் பெற துவங்குகின்றனர். தற்போது ஒரு கருவூல அலுவலர், ஒரு உதவி அலுவலர், 10 கணக்கர்கள், 5 கண்காணிப்பாளர்கள் தான் பணிபுரிகின்றனர். இவர்கள் 44 ஆயிரம் ஓய்வூதியர்கள் உட்பட அரசு ஊழியர்களின் சம்பளம் உட்பட அனைத்துப் பணிகளையும் கவனிக்கின்றனர். ஒரு கணக்கர் குறைந்தது 4 ஆயிரம் ஓய்வூதியர்களின் பணிகளை கவனிக்க வேண்டியுள்ளது. மற்ற மாவட்டங்களில் ஒரு ஊழியர் 750 ஓய்வூதியர்களின் பணிகளை கவனிக்கிறார். எனவே கூடுதல் ஊழியர்களை நியமிக்க ஏதுவாக மாவட்ட கருவூலத்தை ஓய்வூதிய அலுவலகமாக மாற்ற வேண்டும் என நீண்டகாலமாக வலியுறுத்தப்படுகிறது. ஆனால் நடவடிக்கை இல்லை.மூத்த குடிமக்கள், ஓய்வூதியர் நலச்சங்க தலைவர் காளிதாஸ் கூறியதாவது: ஓய்வூதிய வழங்கும் அலுவலகத்தின் அவசியத்தை உணர்ந்து கருவூலத்துறை முதன்மை செயலர் ஜவஹர் நிதித்துறையினருக்கு பரிந்துரை செய்தார். ஆனால் நிதித்துறையில் அவரது பரிந்துரை கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் ஓய்வூதிய பணிகளில் மந்தம் நிலவுகிறது. நிதி அமைச்சர் பன்னீர்செல்வம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here