கனவு ஆசிரியர்விருது மாவட்டத்துக்கு 6 ஆசிரியர்களை தேர்ந்தெடுக்க குழுக்கள் அமைப்பு!!!

0
255

தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:–
அரசு, ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் சிறந்த முறையில் கணினியை பயன்படுத்தி மாணவர்களுக்கு

பயிற்றுவிக்கும் சிறந்த ஆசிரியர், கல்வி இணை செயல்பாடுகளில் சிறந்து விளங்கும் ஆசிரியர் மற்றும் மாணவர்கள் சேர்க்கை மற்றும் பள்ளி மேலாண்மையில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களை ஊக்குவிக்கும் விதமாக ஒரு மாவட்டத்துக்கு 6 ஆசிரியர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு கனவு ஆசிரியர் விருதுடன், ரூ.10 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று 2017–18–ம் ஆண்டிற்கான பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கையின் போது அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார்.

அதன்படி கனவு ஆசிரியர் விருதுக்கு ஆசிரியர்களை தேர்வு செய்ய மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வி இயக்குனர் தலைவராகவும், பள்ளிக்கல்வித்துறை கூடுதல், இணை செயலாளர், தொடக்கக் கல்வி இயக்குனர், அரசு தேர்வுகள் துறை இயக்குனர், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குனர், அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தின் திட்ட இயக்குனர் ஆகியோர் உறுப்பினர்களாகவும், பள்ளிக்கல்வி இணை இயக்குனர் (மேல்நிலை கல்வி) உறுப்பினர் செயலராகவும் மாநில குழு அமைக்கப்படுகிறது.
முதன்மை கல்வி அலுவலர் தலைவராகவும், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர், மூத்த உதவி தொடக்க கல்வி அலுவலர், தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற மூத்த தலைமை ஆசிரியர், அனைவருக்கும் இடைநிலை கல்வித்திட்டத்தின் கூடுதல் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் உறுப்பினர்களாகவும் மாவட்ட தேர்வுக்குழு அமைக்கப்படுகிறது.
ஒரு மாவட்டத்துக்கு 6 ஆசிரியர்கள் வீதம் 192 ஆசிரியர்கள் கனவு ஆசிரியர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். அவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.19 லட்சத்து 20 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here