கணினி அறிவியலில் அரசுப்பள்ளி மாணவர்கள் பின்தங்கி இருப்பதால் – இந்து நாளிதழ் கட்டுரை!!!

0
310

“கணினி அறிவியலில் அரசுப்பள்ளி மாணவர்கள் பின்தங்கி இருப்பதால்” – இந்து நாளிதழ் கட்டுரை..

கணினி அறிவியலில் பின்தங்கிய அரசுப்பள்ளியில் மாணவர்கள்..
வேலை வாய்ப்புக்கான நேர்காணலின்போது அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஏற்படும் மன உளைச்சலை உருக்கமாக வெளிப்படுத்தும் குறும்படம் ஒன்று இணையத்தில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. இந்த குறும்படத்தை உருவாக்கியவர்கள் பி.எட்., கணினி அறிவியல் படித்த வேலையில்லா பட்டதாரி ஆசியர்கள்.
கணினி மற்றும் இணையம் சார்ந்த பயன்பாடுகள் அசுர வேகத்தில் வளர்ந்து வருகின்றன. அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள் மட்டுமல்லாது வீடுகளிலும் தற்போது அத்தியாவசியமான ஒன்றாகி விட்டன கணிப்பொறிகள். கணினி தொழில் நுட்பக் கல்வியானது மாணவர்களை சிறந்த படைப்பாளிகளாகவும் தன்னம்பிக்கை கொண்டவர்களாகவும் உருவாக்கும் என்கிறார்கள் கல்வியாளர்கள்.
அடிப்படை அறிவை எட்டாமலேயே..
இதை உணர்ந்து தனியார் பள்ளிகளில் கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம் மற்றும் தனித் திறன் உள்ளிட்ட பாடங்களை முதல் வகுப்பிலிருந்தே கற்றுக் கொடுக்க ஆரம்பித்துவிடுகின்றனர். ஆனால், அரசுப் பள்ளிகள் பெரும்பாலானவற்றில் இப்படி அக்கறை எடுக்க ஆளில்லாததால் அங்கு படிக்கும் மாணவர்கள் கணினி சார்ந்த அடிப்படை அறிவை எட்டாதவர்களாகவே கல்லூரிகளில் கால்பதிக் கின்றனர்.
கல்லூரி பாடத்திட்டத்தில் எந்தப் பாடப்பிரிவை எடுத்தாலும், கணினி அறிவியலும் ஒரு கட்டாயப் பாடமாக வருகிறது. இதனால், கணினி சார்ந்த அடிப்படை அறிவைப் பெறாத அரசுப் பள்ளி மாணவர்கள், கல்லூரிகளில் கணினி சார்ந்த படிப்புகளை பயிலும்போது தடுமாறுகின்றனர். இதனால், கடுமையான மன உளைச்சலுக்கும், தாழ்வு மனப்பான்மைக்கும் உள்ளாகிறார்கள்.
இத்தனைக்கும், பி.எட்., முடித்த 39 ஆயிரம் கணினி பட்டதாரிகள் வெளியே காத்திருக்கிறார்கள். ஆனால், இவர்களை பணியமர்த்தி, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கணினி அறிவியல், தகவல் தொழில் நுட்பம் சார்ந்த பாடங்களை பயிற்றுவிக்க முயற்சிக்காமல் அசட்டையாய் இருக்கிறது அரசு. இந்த ஆசிரியர்கள் வேலைவாய்ப்புக் கேட்டு நடத்திவரும் தொடர் போராட்டங்களும் கண்டுகொள்ளப்படவில்லை. இந்த நிலையில்தான், இந்த ஆசிரியர்கள், அரசுப் பள்ளிகளில் கணினி கல்வி பெறாத மாணவர்கள் வேலை வாய்ப்புக்கான நேர்காணலின் போது எத்தகைய மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள் என்பதை உருக்கமாக வெளிப்படுத்தும் குறும்படத்தை தயாரித்து இணையத்தில் விட்டுள்ளனர்.
வாய்ப்பளிக்க மறுக்கும் அரசு
இந்தக் குறும்படத்தை உருவாக்கிய பி.எட்., கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் வெ.குமரேசனிடம் பேசினோம். “மற்ற பி.எட்., பட்டதாரிகளைப் போலத் தான் நாங்களும் கணினி ஆசிரியர் பயிற்சி படித்து முடித்தோம். ஆனால், எங்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு எழுத ஒரு வாய்ப்புக்கூட வழங்காமல் வைத்திருக்கிறது அரசு. அதிகமான ஊதியம் கொடுக்க வேண்டியிருக்குமோ எனப் பயந்து தனியார் பள்ளிகளிலும் எங்களைத் தவிர்த்துவிட்டு, டிப்ளமோ படித்தவர்களை பணியில் அமர்த்துகிறார்கள்.
கணினியை எப்படி முறையாக பயன்படுத்துவது, கணினி சார்ந்த தொழில்நுட்பங்களை கையாள்வது எப்படி என்பதை எல்லாம் எங்களால்தான் மாணவர்களுக்குத் திறம்படக் கற்பிக்க முடியும். இதை உணராத அரசும் தனியார் பள்ளிகளும் எங்களுக்கு வாய்ப்பளிக்க மறுக்கின்றன. இதனால், கணினி பட்டதாரிகள் தனியார் மில்களில் தினக்கூலிக்கு வேலை பார்க்கிறோம். இன்னும் பலர் அதுவும் கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள்’’ என்றார்.
கேரளத்தில் கட்டாயம்
தொடர்ந்தும் பேசிய அவர், “கேரளத்தில், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் கணினி அறிவியலில் கட்டாயம் பாஸ் ஆகவேண்டும். அந்த அளவுக்கு அவர்கள் அடிப்படையிலிருந்தே மாணவர்களுக்கு கணினி அறிவியலை முறையாகப் போதிக்கிறார்கள். அதுபோல, இங்கும் கணினி கல்வியை முறையாக பயிற்றுவித்தால் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்கும். அரசுப் பள்ளிகள் மீதான பெற்றோரின் அவநம்பிக்கையும் விலகும்” என்றார்.
இந்தப் பிரச்சினை குறித்து பள்ளிக்கல்வி்த்துறை உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பணியாற்றும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டுமே தகுதித் தேர்வில் தேர்ச்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
கணினி ஆசிரியர் பணியிடம் இல்லை
பத்தாம் வகுப்புக்கு கீழ் கணினி ஆசிரியர் பணியிடம் இல்லை. மேல்நிலைப் பள்ளிகளில்தான் கணினி பயிற்றுநர் என்ற பதவியில் கணினி ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். இவர்களுக்குத் தகுதித் தேர்வு தேவையில்லை. மேல்நிலைப் பள்ளிகளில் பணி யாற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலமாக தேர்வு செய்யப்படுகிறார்கள். எனவே, கணினி அறிவியல் படித்த ஆசிரியர்கள், மேல்நிலைப் பள்ளி கணினி பயிற்றுநர் பணிக்கான தேர்வுக்கு விண்ணப்பித்து, வேலை வாய்ப்பைப் பெறலாம்” என்றார்.

மடிக்கணினி கொடுத்து என்ன பயன்?
தமிழகத்தில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளிகள் இருக்கின்றன. இவற்றில் பல பள்ளிகளில் கணினி அறிவியல் பாடம் இதுவரை தொடங்கப்படவில்லை. இந்தப் பாடப் பிரிவு இருக்கும் பல பள்ளிகளிலும் அதற்கான ஆசிரியர்கள் இல்லை. இந்த நிலையில், 27 லட்சம் மாணவர்களுக்கு மடிக் கணினிகளை வாங்கிவிட்டதாக மார்தட்டுகிறது அரசு. கணினி அறிவே இல்லாத மாணவர்களுக்கு மடிக்கணினி கொடுத்து என்ன பயன்?
”கல்லூரி பாடத்திட்டங்களில், நிரலாக்கம் (Programming), வலைதள வடிவமைப்பு (Web-designing), இணையம், தரவுதள-மேலாண்மை, டிஜிட்டல் பாடப் பிரிவுகள், ரோபோடிக்ஸ் போன்றவை இன்று அதிமுக்கியத்துவம் வாய்ந்தவைகளாக உள்ளன. ஆனாலும் அரசுப் பள்ளி களில் கணினி கல்வியைக் கட்டாயமாக்காமல் அரசு காலம் கடத்துவது தமிழகத்தின் எதிர்காலத்தையும் பாதிக்கும்’’ என்கின்றனர் கணினி ஆசிரியர்கள்..

செய்தி ஆசிரியர்:
ஒய்.ஆண்டனி படம்:செல்வராஜ் எஸ்.கிருஷ்ணமூர்த்தி.
திரு வெ.குமரேசன் ,
9626545446 ,
மாநிலப் பொதுச்செயலாளர் ,
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் ஆசிரியர்கள் சங்கம் .
நன்றி :இந்து தமிழ் நாளிதழ் 

SOURCE:

https://etamil.thehindu.com/Home/ShareArticle?OrgId=G2C2SHJ9A.1&imageview=0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here