கூடுதலாக 750 டாக்டர்கள் 2,000 நர்ஸ்கள் நியமனம் டெங்குவை ஒழிக்க தீவிர நடவடிக்கைகள்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு!!!

0
263

தர்மபுரி அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நேற்று நடந்தது. இதில் 25,596 பயனாளிகளுக்கு ரூ.182.99 கோடி மதிப்பிலான நலத்திட்டங்கள், ரூ.1444.87 கோடியில் திட்டப்பணிகள் மற்றும் ரூ.29.44 கோடியில் புதிய கட்டிடங்களை திறந்து வைத்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: தொண்டர்களுக்காக உருவான இயக்கம் அதிமுக. எம்ஜிஆர் ரசிகர்களே இங்கு தொண்டர்களாகவும், அவர் மறைந்த பின்பு பக்தர்களாகவும் மாறியிருக்கின்றனர். நெஞ்சில் வஞ்சனையோடு உள்ள தலைவர்களை மட்டுமே இப்போது பார்க்க முடிகிறது. ஆனால், திறந்த இதயத்தோடு செயல்பட்டு தொண்டர்களின் இதயத்தில் குடிகொண்ட மாபெரும் தலைவர் எமஜிஆர். 1980ல் தர்மபுரியில் நக்சலைட்கள் பிரச்னை ஏற்பட்டபோது அதை எம்ஜிஆர் ஒடுக்கினார்.

தற்போது எனது தலைமையிலான அரசும் எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில்தான் செயல்படுகிறது.
குட்டிக்கதை: ஒரு வனத்தில் ஆல மரம் ஒன்று இருந்தது. அதில் வாசனையுடன் பல்வேறு வண்ணப்பூக்கள் மலர்ந்து மனம் பரப்பியது. அந்த மலர்களின் வாசனையில் மெய்மறந்து அந்த மரத்திற்கடியில் மக்கள் இளைப்பாறி வந்தனர்.

அப்போது, ஒரு பூவின் காதருகில் வந்த காற்று இந்த மரத்திலேயே நீதான் அழகாக இருக்கிறாய். உன்னிடம் இருந்து தான் அற்புதமான நறுமணம் வருகிறது. நீ இந்த மரத்தில் இருந்து உதிர்ந்து வந்தால் உனது அழகையும், பெருமையையும் ஊர் முழுக்க பரப்புவேன் என்றது. அதனை நம்பிய பூ, மரத்தில் இருந்து உதிர்ந்து கீழே வந்தது. காற்றால் எந்த நேரத்திலும் ஒரே சீராக வீச முடியாது. இதனால், அந்த மரத்தில் இருந்து வந்த பூ வெயிலில் வாடி கருகி போனது. அதிமுக என்பது பெரிய ஆலமரம். அதில் இருந்து சில பூக்கள் உதிர்ந்தால், பல பூக்கள் பூக்கும். காற்றை நம்பிச் செல்லும் ஓரிரு பூக்கள் வீணாக கருகி போகும் என்பதை உணர வேண்டும். இந்த மாவட்டத்தில் இருந்தும் 2 பேர் சென்றிருக்கிறார்கள். அதனால், இயக்கத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை. தமிழகத்தில் சீதோஷ்ண நிலை மாற்றத்தால் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகிறோம். ரூ.23.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்து டெங்கு காய்ச்சல் கண்டறியும் செல்ப் கவுன்டர் கருவிகள் வாங்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 833 கருவிகள் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அந்த கருவிகள் மூலம் ரத்த அணுக்களில் டெங்கு கலந்திருப்பதை கண்டுபிடித்து உடனடியாக சிகிச்சை அளிக்க முடியும். சுத்தமான தண்ணீரில் இருந்து டெங்கு பரப்பும் கொசுக்கள் உருவாவது தெரிய வந்துள்ளது. எனவே, தண்ணீரை எப்போதும் மூடி வைத்திருக்க வேண்டும். டெங்கு குறித்து மருத்துவர்கள் தரும் அறிவுரையை பின்பற்ற வேண்டும். டெங்கு காய்ச்சல் பரப்பும் கொசு ஒழிப்பு பணியில் 40 ஆயிரம் மஸ்தூர்கள் ஈடுபட்டுள்ளனர். அனைத்து இடங்களிலும் நிலவேம்பு குடிநீர் வழங்கப்படுகிறது. டெங்கு பரப்பும் கொசுக்கள் 21 நாட்கள் வரை உயிர்வாழும். ஒரே நேரத்தில் 1500 முட்டைகள் இடும். இதை வைத்தே கொசுக்கள் எவ்வளவு வேகமாக உற்பத்தியாகிறது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் 10,500 செவிலியர்கள் ஈடுபட்டுள்ளனர். புதிதாக 2000 செவிலியர்கள் பணியமர்த்தப்படுவர். 1113 மருத்துவர்களும், 650 சிறப்பு மருத்துவர்களும் பணியில் உள்ளனர். இன்னும் 10 நாளில் 744 சிறப்பு மருத்துவர்களை நியமிக்க இருக்கிறோம். எனவே அனைவரும் அரசுக்கு துணை நின்று டெங்கு கொசு ஒழிப்பு பணிகளுக்கு ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here