தன்னம்பிக்கையுடன், திட்டமிட்டு படித்தால் போட்டித்தேர்வில் வெற்றி பெறலாம்!!!

0
343

தன்னம்பிக்கையுடன், திட்டமிட்டு படித்தால் போட்டித்தேர்வில் வெற்றி பெறலாம்!!!

தன்னம்பிக்கையுடன், திட்டமிட்டு படித்தால் போட்டித்தேர்வில் வெற்றி பெறலாம்!!! சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ஞாயிற்றுக்கிழமைதோறும் வாசகர்கள் மற்றும் இளைஞர்களுக்கான நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவ–மாணவிகளுக்கு இந்திய ஆட்சிப்பணி, இந்திய காவல் பணி, இந்திய வருவாய்ப்பணி உள்ளிட்ட அகில இந்திய பணிகளில் பணியாற்றும் மூத்த அதிகாரிகள் மற்றும் துறை வல்லுனர்கள் ஆலோசனை வழங்கி வருகிறார்கள். அதன்படி அங்கு நேற்று காலை 11 மணிக்கு தமிழக அரசின் பொருளாதாரம் மற்றும் புள்ளியில் துறை முதன்மை செயலாளர் வெ.இறையன்பு கலந்துகொண்டு மாணவ–மாணவிகள் மத்தியில் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:– மாணவ–மாணவிகளாகிய நீங்கள் பள்ளி, கல்லூரிகளில் படித்தது வேறு, போட்டித்தேர்வு என்பது வேறு. பள்ளி மற்றும் கல்லூரிகளில் சாதாரணமாக படித்தவர்களும் போட்டித்தேர்வை எழுதி வெற்றி பெறலாம். போட்டித்தேர்வு அவ்வளவு கடினம், வெற்றி பெறுவது சிரமம் என்று சொல்லமாட்டேன்.  எந்த வழியில் செல்லலாம் என்பதை போட்டித்தேர்வுக்கு முன் நீங்கள் தான் முடிவு செய்யவேண்டும். வங்கித்தேர்வு, தமிழக அரசு நடத்தும் தேர்வுகள், இந்திய என்ஜினீயரிங் தேர்வுகள், சிவில் சர்வீசஸ் தேர்வுகள் ஆகியவற்றில் எதை நீங்கள் விரும்புகிறீர்களோ அந்த போட்டித்தேர்வை தேர்ந்தெடுங்கள். ஐ.ஏ.எஸ். தேர்வு எழுத நீங்கள் சகஜமாக பொதுமக்கள் மத்தியில் பழகுபவராக இருக்க வேண்டும். பொதுமக்களுக்கு தொண்டு செய்யும் நோக்கத்துடன் இருக்க வேண்டும். ஏழைகளின் கண்ணீரை போக்கும் கோப்புகள் நிறையவரும். அவர்களின் கண்ணீரை துடைக்கும் வகையில் நீங்கள் இருந்தால் தான் சிவில் சர்வீசஸ் தேர்வை எழுத வேண்டும்.  அன்றாடம் தேசிய அளவில் செய்தி மற்றும் விளையாட்டு செய்திகளை வெளியிடும் பத்திரிகைகளை படித்து குறிப்பு எழுதி வைத்துக் கொள்ளுங்கள். நன்றாக புரிந்து ஆழமாக படியுங்கள். எதையும் மகிழ்ச்சியாக படியுங்கள். அப்போது தான் சலிப்பு ஏற்படாது, சோர்வு வராது.  தொடர்ந்து ஒரே பாடத்தை படிக்காதீர்கள். உதாரணமாக வரலாறு என்றால் தொடர்ந்து அதை படிக்காதீர்கள். சுற்றுச்சூழல் படியுங்கள். வேறு பாடங்களை படிக்கலாம். நீங்கள் தினமும் உடற்பயிற்சி செய்வது நல்லது. நீங்கள் விரும்பும் இசையை அரை மணி நேரம் கேட்பது நல்லது. குறைந்தபட்சம் 7 மணி நேரம் தூங்குங்கள். நல்ல சத்துள்ள உணவை சாப்பிடுங்கள். இந்த தேதியில் இத்தனை மணிக்கு இதை படிக்க வேண்டும் என்று திட்டமிட்டு, அதற்கான அட்டவணை ஏற்படுத்தி படியுங்கள். தன்னம்பிக்கையுடன், திட்டமிட்டு படித்தால் போட்டித்தேர்வுகளில் வெற்றி பெறுவது உறுதி.  இவ்வாறு வெ.இறையன்பு பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here