பெட்ரோல், டீசல் விலைகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள வந்துவிட்டது செல்போன் ஆப்!!!

0
557
சென்னை: நாளை, அதாவது ஜூன் 16ம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலையை தினசரி அடிப்படையில் நிர்ணயம் செய்யும் புதிய திட்டம் அமல்படுத்தப்பட உள்ள நிலையில், இந்த விலை விவரங்களை பெட்ரோல் நிரப்பு நிலைய விநியோகஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் அறிந்து கொள்வதற்காக புதிதாக செயலியை (ஆப்) இந்தியன் ஆயில் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
தற்போது மாதம்தோறும் 1 மற்றும் 16-ம் தேதிகளில் எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன. இந்நிலையில், நாளை முதல் பெட்ரோல், டீசல் விலையை தினசரி அடிப்படையில் நிர்ணயம் செய்யும் புதிய திட்டத்தை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
உலகின் பல்வேறு நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை தினசரி அடிப்படையில் நிர்ணயம் செய்யப்பட்டு விற்கப்பட்டு வருகின்றன. அதேபோல், இந்தியாவிலும் இவற்றின் விலை தினசரி அடிப்படையில் நிர்ணயம் செய்ய மத்திய அரசு முடிவு செய்தது.
இதற்காக, புதுச்சேரி, விசாகப்பட்டினம், உதய்பூர், சண்டீகர், ஜாம்ஷெட்பூர் ஆகிய ஐந்து நகரங்களில் கடந்த 40 நாட்களாக சோதனை அடிப்படையில் இத்திட்டம் சோதித்துப் பார்க்கப்பட்டது. இதில் கிடைத்த வெற்றியையடுத்து நாளை முதல் நாடு முழுவதும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
ஒவ்வொரு நாளும் இரவு 8 மணிக்கு அடுத்த நாளுக்கான விலை குறித்த விவரம் டீலர்களுக்கு தெரிவிக்கப்படும். இதற்காக Fuel@IOC என்ற செயலி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலி மூலம் அவர்கள் தினசரி பெட்ரோல், டீசல் விலையை அறிந்து கொள்ளலாம்.
ஸ்மார்ட் போனில் கூகுள் பிளேஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்தும் வகையில் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த செயலி வாடிக்கையாளர்களின் தேவையை முழுவதும் பூர்த்தி செய்யும் வகையில் இல்லை என்று பயனாளர்கள் விமர்சனம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here