பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி’டிமிக்கி’ கொடுக்கும் ஆசிரியர்களுக்கு ‘செக்’

0
438

தனியார் பள்ளி ஆசிரியர்கள் புறக்கணிப்பால், பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி தாமதமாகி உள்ளது.பிளஸ் 2 பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தம், ஏப்., 5ல் துவங்கியது; 9.33 லட்சம் மாணவ, மாணவியரின் விடைத்தாள்கள் திருத்தப்படுகின்றன. முக்கிய பாடங்களின் விடைத்தாள் திருத்தும் பணி, இறுதி கட்டத்தில் உள்ளது.

ஆனால், தமிழ், ஆங்கிலம் போன்ற மொழி பாடங்களை பொறுத்தவரை, கால தாமதம் ஏற்பட்டுள்ளது. இதற்காக, மாவட்ட வாரியாக, நான்கு முகாம்கள் அமைத்து, விடைத்தாள்கள் திருத்தப்படுகின்றன.சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை, திருச்சி, மதுரை, ஈரோடு, நாமக்கல், திருநெல்வேலி போன்ற முக்கிய மாவட்டங்களில், விடைத்தாள்களை திருத்த, ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

பெரும்பாலான தனியார் பள்ளிகள், தங்கள் ஆசிரியர்களை, திருத்தும் பணிக்கு அனுப்புவதில்லை. குறிப்பாக, பிளஸ் 2 ஆசிரியர்களை, அடுத்த ஆண்டுக்கான பாடம் எடுக்க வைக்கின்றனர். எனவே, விடைத்தாள் திருத்தும் பணிகளை, குறிப்பிட்ட காலத்தில் முடிக்க முடியுமா என, அதிகாரிகள் சந்தேகம் அடைந்து உள்ளனர்.

இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், காஞ்சிபுரம் மாவட்ட தனியார் பள்ளிகளுக்கு, முதன்மை கல்வி அதிகாரி உஷா, அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதில், ‘தனியார் பள்ளிகளில், பிளஸ் 2 பாடம் எடுக்கும் ஆசிரியர்கள், பள்ளியின் கடிதத்துடன், விடைத்தாள் திருத்தும் பணிக்கு கண்டிப்பாக வர வேண்டும். மருத்துவ பிரச்னை அல்லது வேறு பிரச்னைகளை கூறி, வர மறுத்தால், சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என, அவர் எச்சரித்துள்ளார். இதே போல், ஈரோடு, தர்மபுரி, கடலுார், கோவை உள்ளிட்ட மாவட்ட அதிகாரிகளும், தனியார் பள்ளிகளுக்கு, எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து, தனியார் பள்ளிகளில் ஆய்வு நடத்தவும், இணை இயக்குனர்கள் முடிவு செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here