16 மதிப்பெண்களுக்கு எதிர்பாராத வினாக்கள் : கணிதத்தில் ‘சென்டம்’ குறையும்

0
571

தேனி: பிளஸ் 2 கணிதத்தேர்வில், மொத்தம் 16 மதிப்பெண்களுக்கு, எதிர்பாராத வினாக்கள் கேட்கப்பட்டதால், ‘சென்டம்’ எடுப்போர் எண்ணிக்கை குறையும் வாய்ப்புள்ளது என, மாணவர்கள் தெரிவித்தனர்.
நேற்று நடந்த தேர்வு குறித்து அவர்களின் கருத்து
எஸ்.கற்குவேல் கார்த்திகேயன், மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, முத்துத்தேவன்பட்டி, தேனி: பகுதி இரண்டில் ஆறு மதிப்பெண் வினாவில் கட்டாய கேள்விகள் 55 – ஏ, 55-பி, இரண்டுமே எதிர்பாராததாக இருந்தது. இந்த வினாக்கள் இதுவரை கேட்கப்படாதவை. 53வது வினாவில் 1வது பிரிவு வினா 10.5 பயிற்சி கேட்கப்பட்டுள்ளது. இது பெரும்பாலும் வராது என படிக்காமல் விடப்படும். 10 மதிப்பெண் கட்டாய வினாவில் இரு வினாக்களும் எதிர்பாராதவை. எல்லா பயிற்சிகளும் முழுமையாக படித்தவர்கள் மட்டுமே இதற்கு விடையளிக்கலாம். மற்ற வினாக்கள் எளிமை என்பதால் சராசரி மாணவரும் நல்ல மதிப்பெண் பெறுவர். எதிர்பாராத வினாக்களால் ‘சென்டம்’ எடுப்போர் எண்ணிக்கை குறையும்.
எளிமை – ஜெ.பிரித்திகா சென், என்.எஸ்.கே.பி.,மேல்நிலைப்பள்ளி, கூடலுார்: கணிதம் வினாத்தாள் மிகவும் எளிமையாக இருந்தது. கட்டாய வினாவில் 6 மதிப்பெண் கேள்வி, சற்று சிரமமாக இருந்தது. அதே வேளையில் 10 மதிப்பெண் வினா மிகவும் எளிமையாக இருந்தது. அதில் கடந்த ஆண்டு வந்த அதிகம் கேள்விகள் இருந்தன. புத்தகத்தில் இருந்த வினாக்கள் மட்டுமே கேட்கப்பட்டன. அதற்காக பள்ளியில் அளிக்கப்பட்ட பயிற்சி பயன்தந்தது. ஒரு மதிப்பெண் வினா அனைத்தும் மிக எளிமை.
சிறிது குழப்பம் – டி.முத்துக்குமரநாயகி, ஆசிரியை, மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, முத்துத்தேவன்பட்டி: ஒரு மதிப்பெண் வினாக்களில் 9 வினாக்கள் பெற்றோர் ஆசிரியர் கழகம் வழங்கிய புத்தகத்தில் இருந்தும், 31வினாக்கள் ‘புக்பேக்’ பகுதியில் இருந்து கேட்கப்பட்டுள்ளன. 6 மதிப்பெண்ணுக்கான 45வது வினாவில் கலப்பு எண்கள் வினா ‘கிரியேட்டிவ்’ ஆக கேட்டுள்ளனர். இதனால் மாணவர்களுக்கு சிறிது குழப்பம் இருந்திருக்கும். பத்து மதிப்பெண்ணில் 69வதுதாக கேட்கப்பட்ட நிகழ் தகவு பரவல் வினாவை மாணவர்கள் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். பத்து மதிப்பெண்ணுக்கான கட்டாய வினாவில் ‘ஏ ‘வினா வகை நுண்கணிதம் மற்றும் அவற்றின் பயன்பாடு பற்றியும், பி.வினா டிபிரன்சியல் ஈக்குவேஷன் கேட்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி கணக்கில் 8.5, 8.6 பயிற்சியை மாணவர்கள் நன்கு படிப்பார்கள்.ஆனால் 8.2வது பயிற்சியில் வினா கேட்கப்பட்டுள்ளதால், பலர் இந்த வினாவை சரியாக எழுதியிருக்க மாட்டார்கள். நன்கு படிக்கும் மாணவர்கள் மட்டுமே எழுதியிருப்பார்கள். கணித தேர்வில் மொத்தம் 16 மதிப்பெண்கள் எதிர்பாராத வினாக்களாக வந்துள்ளது.
இதனால் 200க்கு 200 மதிப்பெண் எடுப்பவர் எண்ணிக்கை குறையும். மற்றபடி சராசரியாக படிக்கும் மாணவரும் நல்ல மதிப்பெண் பெறுவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here