தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் விண்ணப்பிக்க வேண்டிய நேரமிது!

0
436

அண்மைக்காலமாக டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம், ஹைதராபாத் பல்கலைக்கழகம் குறித்துதான் அதிகளவில் கேள்விப்பட்டிருப்போம். இந்தப் பல்கலைக்கழகங்கள் மத்திய மனித வளத்துறையின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்குகின்றன. இதைப்போலவே, தமிழ்நாட்டில் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம், மத்திய அரசின் கீழ் இயங்கும் பல்கலைக்கழகங்களில் மிக முக்கியமானது. இந்தப் பல்கலைக்கழகத்தில் பிளஸ் டூ தேர்வு எழுதிக் கொண்டிருப்பவர்கள் ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு படிக்கவும், தற்போது இளநிலை பட்டப்படிப்பு படித்துக்கொண்டிருப்பவர்கள் முதுநிலை பட்டப்படிப்பு படிக்கவும் விண்ணப்பம் வழங்கப்படுகிறது.

மத்திய அரசின் மனித வளத்துறையின் கீழ் 40-க்கும் மேற்பட்ட மத்திய பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. பொதுவாக, கல்வி நிறுவனங்களின் தர மதிப்பில் ஐஐடி-கள் முதல் வரிசையிலும், அதற்கு அடுத்து மத்தியப் பல்கலைக்கழகங்கள் முக்கிய இடத்தில் இருக்கின்றன. தமிழ்நாட்டில் திருவாரூரில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் குறித்து பலரும் அறியாமல் இருக்கிறார்கள்.

தஞ்சாவூரில் இருந்து 60 கி.மீட்டர் தொலைவிலும் திருவாரூரில் இருந்து ஒன்பது கி.மீட்டர் தொலைவில் நீலக்குடி, நாகக்குடி கிராமங்களில் 516 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கிறது தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம். இங்கு பிளஸ் டூ மாணவர்கள் ஒருங்கிணைந்த ஐந்தாண்டு படிப்புகளாக எம்எஸ்சி வேதியியல் (Chemistry), பொருளியல் (Economics), உயிரி அறிவியல் (Life Sciences), கணிதம் (Maths), இயற்பியல் (Physics) படிப்புகளும், இளநிலை பட்டப்படிப்பு படிப்பவர்களுக்கு இரண்டு ஆண்டு முதுநிலை படிப்புகளாக எம்எஸ்சி வேதியியல் (Chemistry), கணினி அறிவியல் (Computer Sciences), நோயியல் மற்றும் பொது சுகாதாரம் (Epidemiology & Public Health), புவியியல், மைக்ரோபயாலஜி, அப்ளைடு சைக்காலஜி, எம்டெக் படிப்புகளாக மெட்ரியல் சயின்ஸ் & நானோ டெக்னாலஜி, எனர்ஜி & என்விரண்ட்மென்டல் டெக்னாலஜி படிப்புகளும், முதுநிலை கலைப் பிரிவில் எம்ஏ ஆங்கிலம், ஹிந்தி, மீடியா & கம்யூனிகேஷன், சோசியல் சர்வீஸ், வரலாறு, கிளாசிக் தமிழ், எக்னாமிக்ஸ், எம்பிஏ, எம்.காம், நூலகவியல் மற்றும் தகவல் அறிவியல் பாடங்களும் சொல்லிக் கொடுக்கப்படுகின்றன. இங்கு பி.எட் படிப்புடன் கூடிய பிஎஸ்சி கணிதம் படிப்பும், இளநிலை பிரிவில் சிறப்பு பாடங்களாக இசை, டெக்ஸ்டைல் போன்ற பாடங்களும் இருக்கின்றன.

மேற்சொன்ன பிரிவுகளில் சேர, பொது பிரிவினர் கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களில் 60% குறைவில்லாமல் மதிப்பெண்ணையும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 55% மதிப்பெண்ணையும், இதர பிரிவினர் 50% மதிப்பெண்ணையும் பெற்றிருக்க வேண்டும்.

மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் எக்னாமிக்ஸ் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம்

பொருளாதாரப் படிப்பில் நாட்டின் முன்னணியில் உள்ள மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் எக்னாமிக்ஸ் கல்வி நிறுவனத்துடன் இணைந்து பொருளியல் – பொது (Economics – General), நிதி பொருளியல் (Financial Economics), காப்பீட்டுப் பொருளியல் (Actuarial Economics), சுற்றுச்சூழல் சார்ந்த பொருளியல் (Environmental Economics), பயன்பாட்டு நிதி பகுப்பாய்வு (Applied Quantitative Finance) போன்ற பாடங்கள் சொல்லிக் கொடுக்கப்படுகின்றன. மேலும், செம்மொழித் தமிழ் ஆய்வு நிறுவனத்துடன் இணைந்து முதுகலை தமிழ் பட்டப்படிப்பு சொல்லிக் கொடுக்கப்படுகிறது. இதைத்தவிர, தேசிய சட்ட பள்ளி மற்றும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் போன்றவற்றுடன் இணைந்தும் பல பயிற்சிகளை வழங்குகின்றன.

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் சேர பத்து மத்திய பல்கலைக்கழகங்களும் ஒருங்கிணைந்து நடத்தப்படும் நுழைவுத் தேர்வினை எழுதி இருக்க வேண்டும். இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கடைசி நாள் ஏப்ரல் 14-ம் தேதியாகும். ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும்போது நீங்கள் கொடுக்கும் அலைபேசி எண்ணுக்கு, பதிவு செய்த விவரங்கள் கிடைத்துவிடும். நுழைவுத் தேர்வுக்கான கடிதம் மே 5-ம் தேதி கிடைக்கும். நுழைவுத் தேர்வு மே 17 மற்றும் 18-ம் தேதிகளில் நடைபெறும். தேர்வு, சரியான விடைகளை தேர்ந்தெடுக்கும் வகையில் அமைந்திருக்கும். ஜூன் 7-ம் தேதி முடிவு அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்து மத்தியப் பல்கலைக்கழகங்கள் சேர்ந்து நுழைவுத் தேர்வினை நடத்துவதால் நுழைவுத் தேர்வுக்குப் பின்பு கலந்தாய்வு நடைபெறும். ஒருங்கிணைந்த பட்டப்படிப்பில் ஒவ்வொரு பாடப்பிரிவிலும் 30 மாணவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். மத்திய அரசின் பல்கலைக்கழகம் என்பதால் படிப்புச் செலவு மிகவும் குறைவு. இங்கு முதுநிலை பட்டப்படிப்பினை படிக்க ஆண்டுக் கட்டணமாக பத்தாயிரம் ரூபாய் குறைவான கட்டணமே பெறப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக இணையத்தளம் http://cutn.ac.in/மற்றும் நுழைவுத்தேர்வுக்கு https://cucet2017.co.in/ இணையதளங்களைப் பார்த்து தெரிந்துகொள்ளலாம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here