உள்ளாட்சி தேர்தலுக்கு 5,130 ஓட்டுச்சாவடிகள்: விழுப்புரம் கலெக்டர் தகவல்

0
1158

விழுப்புரம்: ‘விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கு 5,130 ஓட்டுச்சாவடிகள் உருவாக்கப்பட்டுள்ளன’ என கலெக்டர் சுப்ரமணியன் தெரிவித்தார்.
உள்ளாட்சி தேர்தலுக்கான ஓட்டுச்சாவடிகள் அமைப்பது தொடர்பாக, அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம், விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
கலெக்டர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். சப்-கலெக்டர் (பயிற்சி) சரயு, ஊரக வளர்ச்சித் திட்ட அலுவலர் மகேந்திரன், கலெக்டர் நேர்முக உதவியாளர் சேகர், வருவாய் கோட்டாட்சியர் ஜீனத்பானு, டி.எஸ்.பி., சங்கர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கலெக்டர் சுப்ரமணியன் பேசுகையில், உள்ளாட்சி தேர்தலையொட்டி ஊரக பகுதியில் 4,617 ஓட்டுச்சாவடிகள், நகரப் பகுதியில் 513 ஓட்டுச்சாவடிகள் உட்பட மொத்தம் 5,130 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப் பட்டுள்ளன.
மாவட்டத்தில் உள்ள 1099 ஊராட்சிகள், 22 ஒன்றிய அலுவலகங்கள், ஒரு மாவட்ட ஊராட்சி அலுவலகம், 3 நகராட்சி, 15 பேரூராட்சி அலுவலகங்கள் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் வரைவு ஓட்டுச்சாவடி பட்டியல்கள் வைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 26 லட்சத்து 96 ஆயிரத்து 336 வாக்காளர்கள் ஓட்டளிக்க உள்ளனர். வரைவு ஓட்டுச்சாவடி பட்டியல் தொடர்பாக அரசியல் கட்சியினர் ஆட்சேபனையை வரும் 20ம் தேதிக்குள் தேர்தல் அலுவலர்களிடம் தெரிவிக்கலாம். மறுநாள் 21ம் தேதி இறுதி ஓட்டுச்சாவடி பட்டியல் வெளியிடப்படும்.
இவ்வாறு கலெக்டர் சுப்பிரமணியன் கூறினார்.
அரசியல் கட்சிகள் சார்பில், அ.தி.மு.க., முன்னாள் மாவட்ட கவுன்சிலர் செங்குட்டுவன், முன்னாள் கவுன்சிலர் செந்தில், தி.மு.க., முன்னாள் கவுன்சிலர் சக்கரை, காங்., மாவட்ட தலைவர் குலாம்மொய்தீன், பா.ஜ., மாவட்ட செயலாளர் சுகுமார், தே.மு.தி.க., மாவட்ட துணை செயலாளர் கணேசன், ஒன்றிய துணை செயலாளர் மனோ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here