அண்ணாமலை பல்கலை ஆசிரியர்களை அரசு பாலிடெக்னிக்குகள் ஏற்க முடியாது : உயர் கல்வித்துறைக்கு கண்டனம்

0
430

மதுரை: ‘அண்ணாமலை பல்கலை பேராசிரியர்களை, அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில் இடமாற்றம் செய்யக் கூடாது,’ என பாலிடெக்னிக் ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில் உள்ள 300க்கும் மேற்பட்ட பேராசிரியர், உதவி, இணை பேராசிரியர்களை தமிழகத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளுக்கு பணிமாற்றம் செய்ய, உயர்கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.இதற்கு தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் கல்லுாரி ஆசிரியர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மதுரை மேலுார் அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் அச்சங்கத்தின் மத்திய செயற்குழுக் கூட்டம் தலைவர் முத்துக்குமார் தலைமையில் நடந்தது.அப்போது, உயர் கல்வித்துறையின் இச்செயலை கண்டித்து அவசர தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து சங்கப் பொதுச் செயலாளர் தினகரன் கூறியதாவது: அண்ணாமலை பல்கலை செயல்பாடு அனைவருக்கும் தெரிந்தது தான். அங்கு மாணவர்கள் எண்ணிக்கையை விட ஏராளமான உதவி, இணை பேராசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டதால் தற்போது 300க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உபரியாக உள்ளனர். அவர்கள் எந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டனர் என்பதே தெரியவில்லை.இந்நிலையில் அவர்களை தமிழகத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில் இடமாற்றம் செய்ய உயர்கல்வி அதிகாரிகள் சிலர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அவ்வாறு மாற்றம் செய்யப்பட்டால் ஏற்கெனவே அரசு பாலிடெக்னிக்குளில் 400க்கும் மேல் பணியாற்றும் கவுரவ பேராசிரியர்களும், தற்போது பணியாற்றும் ஆசிரியர்களுக்கு சீனியாரிட்டியிலும் பாதிப்பு ஏற்படும். மேலும் ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) மூலம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்புவதிலும் குழப்பம் ஏற்படும். எனவே, அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில் அப்பல்கலை ஆசிரியர்களை நிரப்புவதை உயர்கல்வித்துறை கைவிட வேண்டும். இல்லையென்றால் சட்ட ரீதியான நடவடிக்கையிலும், உண்ணாவிரதம் உட்பட தொடர் போராட்டங்களிலும் ஈடுபடுவோம், என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here