பிளஸ் 2 தேர்வு : மாணவர்களுக்கு தலைவர்கள் வாழ்த்து!

0
735

தமிழகத்தில் நாளை 12-ஆம் வகுப்பு தேர்வு நடைபெறுவதை முன்னிட்டு மாணவ, மாணவியர்களுக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஸ்டாலின்

12-ஆம் வகுப்பு தேர்வு குறித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நாளை முதல் (மார்ச் 2) ப்ளஸ் டூ தேர்வு எழுதும் மாணவ, மாணவியர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தங்களின் அடுத்த கட்ட கல்லூரி வாழ்க்கையை தொடங்குவதற்கு மிக முக்கியமான இந்த தேர்வில் மாணவ-மாணவியர் அதிக மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற வேண்டும் என்றும் வாழ்த்துகிறேன்.

மேலும், நாளை தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இடையுறு இல்லாமல் தனது பிறந்தநாள் நிகழ்ச்சிகளை கொண்டாட வேண்டும் என்றும் ஸ்டாலின் தனது தொண்டர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

ராமதாஸ்

தமிழ்நாடு மற்றும் புதுவையில் பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நாளை தொடங்குகின்றன. இரு மாநிலங்களிலும் சேர்த்து 8 லட்சத்து 98,763 மாணவ, மாணவிகள் இத்தேர்வில் பங்கேற்கின்றனர். பிளஸ்& 2 தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மாணவர்களின் வாழ்வில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மிகவும் முக்கியமானவையாகும். ஒரு மாணவர் எதிர்காலத்தில் என்னவாக உயரப் போகிறார் என்பதை 12-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் பெறும் மதிப்பெண்கள் தான் தீர்மானிக்கின்றன. அந்த வகையில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டியதாகும். இதை உணர்ந்து மாணவர்கள் தேர்வுகளுக்கு தயாராக வேண்டும். ஒரு பாடத் தேர்வுக்கும், அடுத்த பாடத்தேர்வுக்கும் இடையில் போதிய அளவு அவகாசம் வழங்கப்பட்டிருப்பதால் அதை பயன்படுத்திக் கொண்டு மாணவர்கள் சிறப்பாக தயாராக வேண்டும்.

மாணவ, மாணவியரின் மன ஒருங்கிணைப்பை சிதைக்கும் வகையில் பல பிரச்னைகள் உள்ளன. உதாரணமாக, இந்த ஆண்டு நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெறுமா? அல்லது பிளஸ் 2 பொதுத்தேர்வு மதிப்பெண்களின்படி நடைபெறுமா? என்ற குழப்பத்திலிருந்து மாணவர்கள் இன்னும் மீளவில்லை. நீட் தேர்வு உண்டா, இல்லையா? என்பது குறித்த சிந்தனைகளை தற்காலிகமாக ஒத்திவைத்து விட்டு இப்போது பொதுத்தேர்வுகளில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும்.

தேர்வுக்காக படிக்கும் போதும், தேர்வு எழுதும் போதும் பதற்றத்தை தவிர்த்து, கவனத்தை அதிகரிக்க வேண்டும். தேர்வில் நன்கு தெரிந்த விடைகளை முதலில் எழுத வேண்டும். அனைத்துத் தேர்வுகளையும் அச்சமின்றி மாணவர்கள் எழுத வேண்டும். அதேநேரத்தில் மாணவர்களின் படிப்புக்கு பெற்றோர்கள் அனைத்து வகையிலும் உதவியாக இருக்க வேண்டும். மாணவர்களை மதிப்பெண் எடுக்கும் எந்திரமாக கருதி அவர்கள் மீது அழுத்தத்தை திணிக்காமல், அவர்களிடையே நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும்” என்றார்

மேலும் மாணவர்களின் மன ஒருங்கிணைப்பை சிதைக்கும் வகையில் உள்ள நீட் தேர்வு குறித்து தமிழக அரசு தெளிவான முடிவை எடுக்க வேண்டும் என்றும் நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்கான சட்டத்திற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெரும் நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று ராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

விஜயகாந்த்

”பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு நாளை தேர்வு என்பதால், தேர்வு எழுதச் செல்லும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும்எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். மாணவ, மாணவிகளின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் ஒரு முக்கியமான தேர்வு இது என்பதால், தாங்கள் அனைவரும் பெற்றோர்களின் ஆசீர்வாதத்தோடும், ஆசிரியர்களின் வழிகாட்டுதலின்படியும், உறுதியான மனப்பான்மையோடு தேர்வுகளை எழுதி வெற்றிபெற்று, வாழ்க்கையில் எல்லா வளங்களையும், நலன்களையும் பெற்று சிறப்புடன் வாழ என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்” என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here